அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம் - 21ம் திகதி பாடசாலைகளில் மாணவர்களின் நிலை என்ன?

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்  - 21ம் திகதி பாடசாலைகளில் மாணவர்களின் நிலை என்ன?

21ம் திகதி பாடசாலைகளில் மாணவர்களின் நிலை என்ன?

நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றமை இன்று பேசு பொருளாக இருக்கின்றது. கொவிட்-19 தாக்கம் நாடளாவிய ரீதியில் அதிகரித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு இணையவழியில் கல்வி போதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசு தீர்மானித்த போதிலும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தமது பிரச்சினைகளை நிவர்த்திசெய்யக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன.

இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தது. இதற்கு சுயாதீன ஆசிரியர் சங்கம் கடும் எதிப்பை வெளியிட்டதோடு, அரசுடன் இருக்கும் ஒப்பந்தங்கள் காரணமாகவே போராட்டத்தை நிறைவு செய்ய அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்ததாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர். இதே வேளை பாடசாலைகளுக்கு பல மாதங்களுக்கு பிறகு சமூகமளிக்கும் பிள்ளைகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சி அரச அதிபர் வெளியிட்டுள்ள கருத்து தொழிற்சங்கங்களிடையே இருக்கும் நல்லுறவை பாதித்துவிடலாம் என்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிடின் பட்டதாரிப் பயிலுனர்களை வைத்து பாடசாலையை ஆரம்பிக்கலாம் என்று கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி அரச அதிபர் தொழிற்சங்கங்களிடையே முரண்பாட்டை தோற்றுவிக்கின்றார் என்ற கருத்து ஏற்பட்டிருந்தது. ஆனால் எமது ஊடக வலையமைப்பினால் அவ்வாறு கருத முடியவில்லை. ஏனெனில் பிள்ளைகளின் நலனை கருத்திற்கொண்டு அவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கலாம். மேலும் கொவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைக்காகவும் இவ்வாறு தெரிவித்திருக்கலாம்.

எவ்வாறாயினும் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் கொவிட் - 19 கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற வழிகாட்டிகளாக உள்ள ஆசிரியர்கள் அவசியம் தேவை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. வருங்கால சந்ததிகளாக உள்ள பிள்ளைகள் ஆரோக்கியமாக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட அரசு வழிவகை செய்ய வேண்டும் என எமது செய்தித்தளம் எதிர்பார்க்கின்றது.