கொவிட் - 19 சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைப்பதற்கு இலங்கை அரசு முடிவு!

கொவிட் - 19 சிகிச்சை நிலையங்களை படிப்படியாக குறைப்பதற்கு இலங்கை அரசு முடிவு!

இலங்கையில் கொவிட்-19 பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும், இதனால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து நாட்டில் சிறந்த சூழல் உருவாகி வருகின்றது என்றும், சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழிலநுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் இயங்கிவரும் கொவிட் சிகிச்சை மையங்களை படிப்படியாக குறைப்பதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை நடைமுறைப்படுத்தும் முகமாக ஆரம்ப கட்டமாக நாடு முழுவதிலும் 30 சிகிச்சை மையங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றாளர்கள் படிப்படியாக குறைவதால் நாட்டில் இருக்கும் விசேட சிகிச்சை மையங்களையும் குறைக்க நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதுவரை 34007 படுக்கைகள் கொவிட் - 19 சிகிச்சைக்காக இருந்துள்ளதாகவும் அதில் 19660 படுக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொவிட் - 19 விசேட சிகிச்சைக்கென தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஒதுக்கப்பட்டிருந்த 40 சதவீதமான படுக்கைகள் குறைவடையும் அளவிற்கு கொவிட்-19 பரவல் குறைந்திருப்பது நாட்டின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகின்றது என்றார்.

மேலும் கொவிட் -19 பரவலால் எமது நாடு சிவப்பு வலயத்துக்குள் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அது அகன்று பச்சை வலயத்துற்குள் முன்னேறியுள்ளது. எனினும் தற்போதைய நிலையை தொடர்ந்து மக்கள் பின்பற்றாமல் விட்டால் மீண்டும் நாடு சிவப்பு வலயத்துக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை பராமரிக்க சில சுகாதாரச் சட்டங்கள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அடிப்படை சுகாதாரச் சட்டங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.